குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் இ-சைக்கிள் சேவை - பொதுமக்கள் வரவேற்பு சேலம்:சேலம் மாநகர பகுதியில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் சேர்வராயன் மலை அடிவாரத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. சேலம் மாநகர் மக்களின் விருப்பத்திற்கு உரிய பொழுதுபோக்கு பூங்காவாக குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா (Kurumbapatty Zoological Park) திகழ்கிறது.
கடந்த 1981ஆம் ஆண்டில் சிறிய அளவில் சூழலியல் பூங்காவாக தொடங்கப்பட்ட இந்தப் பூங்கா, 2008ஆம் ஆண்டில் சுமார் 78 ஏக்கர் அளவுக்கு வன உயிரியல் பூங்காவாக மாற்றப்பட்டது. இந்த வன உயிரியல் பூங்காவில் கடமான், புள்ளிமான், முதலை, அழியும் தருவாயில் உள்ள குரங்குகள், வங்கா நரி, ஆமை, மலைப்பாம்பு, ராஜநாகம், வெள்ளை மயில், வெளிநாட்டு நீர் பறவைகள் மற்றும் பல்வேறு வகை கிளிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு:அதே போல, கண்களைக் கவரும் பலவகை வண்ணத்துப்பூச்சி பூங்கா, செயற்கை அருவி ஆகியவை அமைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு புது வகை சுற்றுலா அனுபவத்தை தரும் வகையில் வனத்துறையினர் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த பூங்காவானது, தற்போது சிறு பூங்கா என்ற தர நிலையில் இருந்து நடுத்தர பூங்கா என்ற நிலைக்கு மேம்படுத்த ரூ.8 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ரூ.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் வனவிலங்குகள்:அந்தவகையில், வனத்துறை அட்டவணை எண் 1-ல் உள்ள சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட 10 வகை விலங்குகளை இங்கு கொண்டு வர வனத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், மூன்று பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது பூங்காவை சுற்றிப் பார்க்கும் வகையில், 10 பேட்டரியில் இயங்கும் இ-சைக்கிள்களை வனத்துறை இன்று (ஜூன் 22) அறிமுகம் செய்துள்ளது.
இ-சைக்கிள் சேவை அறிமுகம்:இதுதொடர்பாக குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சேலம் மாவட்டம், சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள், எளிதாக சுற்றி பார்க்கும் வகையில் பேட்டரியால் இயங்கும் இ-சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் பயணிகளை மகிழ்வித்து அவர்களுக்கு புதிய சுற்றுலா அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒருமணி நேரத்திற்கு ரூ.50 கட்டணம்: சுமார் 10 சைக்கிள்கள் (Electric cycle introduced in salem Kurumbapatti Zoological Park) வாங்கப்பட்டுள்ளன. இந்த வகை சைக்கிள்கள் ஒவ்வொன்றும் தலா ரூ.32 ஆயிரம் மதிப்புடையதாகும். இந்த சைக்கிள்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரைமணி நேரத்தில் ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் சைக்கிளைப் பயன்படுத்துவோர் தங்களின் சுய அடையாள அட்டையை கொடுத்து ரூ.200 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நடந்து செல்வதைவிட இது புதிய அனுபவம்:இ-சைக்கிள் திட்டம் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 300-க்கும் மேற்பட்டோர் இந்த சைக்கிள்களை பயன்படுத்தி வருகின்றனர்' என்று தெரிவித்துள்ளனர். இந்த இ-சைக்கிள் பயன்பாடு குறித்து கூறிய சுற்றுலா பயணியர்,' உயிரியல் பூங்காவை நடந்து சென்று சுற்றிப் பார்ப்பதை விட எளிதாக இ-சைக்கிள் மூலம் வலம் வந்து சுற்றிப் பார்க்க முடிகிறது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த இ-சைக்கிள்களில் பயணம் செய்வது புதிய அனுபவமாக இருக்கிறது' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காலை ஆட்டிக்கொண்டே முறைத்த கரடி - அலறிய வாகன ஓட்டிகள்!