எடப்பாடி சட்டபேரவைத் தொகுதி தமிழ்நாட்டின் நட்சத்திரத் தொகுதியாகும். முதலமைச்சர் பழனிசாமியை தமிழ்நாட்டுக்குக் கொடுத்த தொகுதி என்பதால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனமும் எடப்பாடி தொகுதியில் குவிந்துள்ளது. இன்றைய அரசியல் களத்தில் எடப்பாடி தவிர்க்க முடியாத தொகுதி என்பதில் ஐயமில்லை.
இந்தத் தொகுதி மக்களின் கோரிக்கைகளில் பலவற்றை நிறைவேற்றித் தந்துவிட்டதாகக் கூறி எடப்பாடிக்குள் வரும்போதெல்லாம் முதலமைச்சர் பெருமிதம் கொள்வார். எடப்பாடி முழுக்க பளபளக்கும் சாலைகள், நகருக்கு வெளியே சுற்றுச்சாலைகள், கிராமங்களில் தரமான தார்ச் சாலைகள், மேட்டூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், அரசுக் கல்லூரிகள், விடுதிகள், சரபங்கா ஆறு தூர்வாருதல் என திரும்பிய பக்கமெல்லாம் எடப்பாடி பழனிசாமி பெற்றுத் தந்த திட்டங்கள் ஏராளம் உண்டு.
அதேபோல மேட்டூர் அணையின் உபரி நீரை எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய தொகுதிகளில் உள்ள 100 ஏரிகளில் நிரப்பி விவசாயிகளின் நூற்றாண்டு கண்ணீரைத் துடைத்து, வறண்ட நிலங்களில் உழவு செழிக்க வைத்ததும் எடப்பாடி பழனிசாமிதான்.
ஆனால் இத்தொகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் வேலைவாய்ப்பின்றி வறுமையில் வாழ்க்கையை நடத்த முடியாமல் திணறி வருவதை நமது கள ஆய்வு உணர்த்தியது.
எடப்பாடி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 378 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 4, 500 பேர் புதிய வாக்காளர்கள். சரி எடப்பாடி தொகுதி கள நிலவரம் யாருக்கு சாதகமாக உள்ளது?
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய எடப்பாடி தொகுதியைச் சேர்ந்த இளைஞர் முத்தமிழ்ச்செல்வன், "கடந்த பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் ஆங்காங்கே சாலைகள் மட்டும்தான் போடப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு இல்லாமல் சுமார் 15 ஆயிரம் பட்டதாரிகள் இருக்கிறோம். எம்.எஸ்.சி. படித்த நான் வேலையின்மையால், தற்போது மில் வேலைக்குத்தான் செல்கிறேன்.
எடப்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் கூறுகையில், "எடப்பாடியை இந்தியா முழுக்க பிரபலமாக்கியவர் முதலமைச்சர் பழனிசாமி. இத்தொகுதியைப் பொறுத்தவரை குறைகள் ஒன்றுமில்லை. ஆனால் நிறைகள் குறைவாகத்தான் உள்ளது.