சேலம்: மேட்டூர் உபரி நீர் திட்டப்பணிகளை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். சேலம் வெள்ளாளபுரம் ஏரி அருகே நடைபெற்று வரும் நீர் உந்து நிலைய கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு விரைவில் முடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சேலம் மாவட்டம் எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100 ஏரியை நிரப்பும் நோக்கத்தில் ரூபாய் 565 கோடி மதிப்பீட்டில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகளை துவக்கி துவக்கிவைத்தேன்.
ஆனால் திமுகவினர் ஆட்சிக்கு வந்து 14 மாத காலம் ஆகிறது. இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால் அதனை முழு மூச்சுடன் நிறைவேற்றி தற்போது மேட்டூரில் இருந்து வெளியேறும் உபரி நீரை 100 ஏரிகளிலும் நிரப்பியிருக்கலாம்.
அதிமுக காலத்தில் துவக்கி வைத்த காரணத்தினால் திமுகவினர் திட்டத்தினை விரைந்து நிறைவேற்ற மனமில்லாமல் காலம் கடத்துவதாக குற்றம் சாட்டிய அவர், அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. மின் கட்டணம் உயர்த்தவில்லை. ஆனால் திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வஞ்சித்து விட்டது என கூறினார்.