சேலம்: 'ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் என்னவென்று அதிமுகவினர் தற்போது புரிந்து கொண்டுள்ளனர். அவரது கருத்துகளை பொருட்படுத்த வேண்டாம். அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று பேசுகிறார், அவரைப் பற்றி பேசத் தயாராக இல்லை' என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் அடுத்த ஓமலூரில் உள்ள அதிமுக சேலம் புறநகர் மாவட்ட அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியினருடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் புறநகர் மாவட்டச்செயலாளர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பி.கள் உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் பங்கெடுப்பது குறித்தும், அதிமுகவில் அதிக அளவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டாரா என்பது தெரியவில்லை. பத்திரிக்கைகளில் சொத்துப்பட்டியல் வெளியிட்டது குறித்து பார்த்தேன். அதிமுக குறித்து அவர் வெளியிடட்டும் பார்க்கலாம். கர்நாடகத் தேர்தல் குறித்து சென்னையில் நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
டிடிவி தினகரன் அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். முதலில் அவரது சொத்துப் பட்டியலை வெளியிடட்டும். லண்டனில் அவருக்கு சொத்து இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதை கண்டுபிடித்து அரசு உடைமையாக்கிட வேண்டும். ஆட்சியில் இருந்தாலே ஊழல் செய்திருக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. அதிமுக வளர்ச்சியைக் கண்டு பொறுக்காமல், சிலர் வதந்தி பரப்புகிறார்கள். அண்ணாமலை பற்றிய கற்பனையான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது.
விரக்தியின் விளிம்பில் ஓபிஎஸ் பேசி வருகிறார். அவரது கருத்தை கண்டுகொள்ளத் தேவையில்லை. முதலில் தர்மயுத்தம் என்றார். இப்போதும் தர்மயுத்தம் என்கிறார். அவரது தர்மயுத்தம் என்ன என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்துகொண்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை வலுப்படுத்துவோம் என சசிகலா சொல்வதை பொருட்படுத்த தேவையில்லை. சசிகலா சட்டப்பேரவைத்தேர்தலின்போது அரசியலில் இல்லை என அறிக்கை வெளியிட்டார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழின் அடிப்படையில் 66 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இவ்வளவு பேர் வெற்றி பெறுவார்கள் என அவர் எதிர்பார்க்கவில்லை. வெற்றி கிடைத்து அதிமுக வளர்ச்சியில் இருப்பதைப் பார்த்து இப்போது இதுபோல சொல்லி வருகிறார். தமிழ்நாட்டில் நடந்து கொண்டு இருப்பது திறமையற்ற அரசாங்கம்.