சேலம்:சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாததை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூலை. 28) நடைபெற்று வருகிறது. சேலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என எழுதப்பட்டிருந்த பதாகைகளை கையில் ஏந்தியபடி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கோரிக்கைகளை திமுக நிறைவேற்றவில்லை
தொடர்ந்து செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, " கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது 505 அறிவிப்புகளை திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த நீட் தேர்வு, கல்வி கடன் ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மின் கணக்கீடு உள்ளிட்ட எந்த கோரிக்கைகளையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.
கண்துடைப்புக்காகவே ஆணையம்
குறிப்பாக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசினார். ஆனால் அதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கண்துடைப்புக்காகவே ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு மாணவர்களையும் பெற்றோரையும் தொடர்ந்து குழப்பி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் போராட்டம்
சட்டப்பேரவையில் இதுகுறித்து கேட்டதற்கு மழுப்பலான பதிலே கிடைத்தது. அப்போது தெரிவித்திருந்தால் கூட மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி இருப்பார்கள். ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் திமுக அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதால்தான் போராட்டம் நடத்தப்படுகிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துகிறோம்.