சேலம்:பனமரத்துப்பட்டி ஆட்டையாம்பட்டி எடப்பாடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 12) அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை உள்ளது. நாள்தோறும் பத்திரிகைகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட செய்திகள் தொடர்ந்து வெளியாகின்றன.
இது, மக்கள் வாழ்க்கை நடத்துவதற்குப் பயனற்ற மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது என்பதைக் காட்டுகிறது. அதிமுக அரசு தமிழ்நாட்டில் நடைபெற்றபோது காவல் துறை சிறந்து விளங்கியது என்று இந்தியா டுடே நிறுவனம் தமிழ்நாட்டிற்கு விருது அளித்தது. அதனை நானே சென்று நேரடியாகப் பெற்றுவந்தேன்.
மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்ற அரசாக அதிமுக அரசு திகழ்ந்தது. இந்தத் தேர்தலில் வேட்பாளர்களை மிரட்டுவது பொதுமக்களை தங்களுக்குத்தான் வாக்களிக்கச் சொல்லி அச்சுறுத்துவது என்பதைத்தான் திமுகவினர் செய்துவருகின்றனர்.