சேலம்:இதுகுறித்து புகழேந்தி செய்தியாளர்களுக்கு அளித்தப்பேட்டியில், “பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை விழா ஆண்டு தோறும் நடைபெறும். சேலம், ஓசூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பேரணியாக செல்ல ஓ. பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார். அதன்படி செல்கிறோம். தென்மாவட்டங்களில் உள்ள மக்களை பார்த்தால் எடப்பாடி பழனிசாமி எதிரியை போல் நினைக்கிறார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நடைபெறும் விழாவிற்கு ஈபிஎஸ் செல்லவில்லை.
முக்குலத்தோர் சமூகத்தை பார்த்தாலே எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் தோற்ற நிலையில் தேனி மக்களால் தான் அதிமுக ஒரு இடத்தில் வெற்றி பெற முடிந்தது. தென்தமிழகம் அதிமுகவின் கோட்டையாக உள்ளது. தென்தமிழகம் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அறிவித்து, தேர்தல் தோல்விக்கு காரணமாக இருந்தவர் ஈபிஎஸ் தான்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, மூத்த தலைவர்களை காவலர்கள் போன்று பயன்படுத்துகிறார். ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட கே.பி.முனுசாமிக்கு அவரது மரணத்திற்கு பிறகு அரசியல் வாழ்க்கை வந்தது. அதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அளித்தார். ஆனால், இப்போது அவரையே அவதூறாக பேசி வருகிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை தரைகுறைவாக பேசி வருகிறார். ஒருநாள் செய்தியாளர்கள் அனைவரும் புறக்கணிக்கும் போது அவருக்கு தெரியவரும்.