விவசாயத்தின் உப தொழிலாக கால்நடைகள் வளர்ப்பு, பால் உற்பத்தி ஆகியவை உள்ளன. கிராமப்புற பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் தொழிலாக பால் உற்பத்தி விளங்குகிறது. தற்போது பெய்த பருவ மழை காரணமாக புற்கள் செழித்து வளர்ந்திருப்பதால், பால் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கரோனா தடைக்காலம் நடைமுறையில் இருப்பதால், பால் உற்பத்தியும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது கண்கூடாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் ஒரு நாளுக்கு சுமார் 206 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 25 லட்சம் லிட்டர் பால், மாடு வளர்ப்போரின் சொந்தப் பயன்பாட்டிற்கும், 105 லட்சம் லிட்டர் பால் அண்டை வீட்டார் மற்றும் சிறு வியாபாரிகளுக்கும் செல்கிறது. எஞ்சிய 76 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கூட்டுறவு மற்றும் தனியார் பால் பண்ணைகள் மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன.
ஒரு பசு மாட்டினை வளர்த்து நாளொன்றுக்கு 5 லிட்டர் பால் வீதம் மாதம்தோறும் பால் கொள்முதல் நிலையங்களுக்கு அளித்தாலும் 6,000 முதல் 8,000 ரூபாய் வரைதான் கைக்கு கிடைக்கும். கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் தற்போதைய நிலை குறித்து சேலம் மாவட்டத்தில் ஈடிவி பாரத் சார்பில் கள ஆய்வு மேற்கொண்டோம்.
கம்மாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர் அமுதாவிடன் இது குறித்து கேட்டோம், ”வங்கிகளில் கடன் பெற்று கறவை மாடுகளை வளர்த்து வருகிறோம். கரோனா தடை காலத்தில் வங்கியில் பெற்ற கடனுக்கு வட்டியும் கட்ட இயலவில்லை. வங்கிகளிலிருந்து கடனை வட்டியுடன் கட்டவேண்டும் என்ற நெருக்கடி வேறு தூங்கவிடுவதில்லை. அதோடு பிள்ளைகளின் பள்ளி கட்டணம் கட்டவும் முடியவில்லை. ஐந்து மாதத்தில் 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. தீவனம் வாங்குவதற்கும் வழியில்லை. அரசு, இந்த கரோனாவுக்கு விரைந்து தீர்வு கண்டுபிடித்து ஊரடங்கு இல்லாத நிலையை கொண்டு வர வேண்டும்" என வேதனை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இயங்கும் பத்துக்கும் மேற்பட்ட தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பால் 20.40 ரூபாய் முதல் 26.90 ரூபாய் வரையே கொள்முதல் செய்கின்றன. இதனால் பால் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்து ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் பால் நிறுவனங்களின் விலை குறைப்பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பால் வழங்குவது அதிகரித்தது.