MDMK President Durai Vaiko Press Meet சேலம்:சேலத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (Mdmk) செயல்வீரர்கள் கூட்டம், அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ கூறுகையில், “உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு எதிரான வழக்கில் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆளுநர்கள், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இ துபோன்று ஆளுநர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஆளுநருக்கு அதிகாரமே இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியதை வரவேற்கிறோம். எனவே ஆளுநர்களைப் பொறுத்தவரையில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்களின் கொள்கை பிடிப்பிலேயே செயல்பட்டு வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர். நம் நாட்டின் விடுதலைக்காக 8 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், ஆளுநர் ரவி அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது மிகவும் வேதனைக்குரியது.
பாஜகவில், தற்போது குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள், போலீசாரால் தேடப்படுபவர்கள் போன்றவர்கள்தான் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, அண்ணாமலை மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற இந்த 3 ஆண்டுகளில், குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள்தான் அதிக அளவில் பாஜகவில் இணைந்திருக்கின்றனர். பாஜகவின் ஆதரவில் மாநிலம் முழுவதும் பல்வேறு வகையான மோசடிகள் அதிக அளவில் அரங்கேறி வருகிறது.
இந்தியாவில் பாஜக ஆளாத பிற மாநிலங்களில் அமலாக்கத்துறை (ED), வருமான வரித்துறை (IT) மூலம் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றனர். நாள்தோறும் இந்த சோதனைகள் நடத்தி, ஆளும் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். ED ஒரு சக்தி வாய்ந்த துறை. இதில் கைது செய்தவர்களுக்கு எளிதில் பெயில் கிடப்பதில்லை. அதனால் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடைக்க இன்னும் கொஞ்சம் நாள் ஆகலாம்.
இது போன்ற நெருக்கடிகளைக் கொடுத்து, திமுகவுக்கு தேர்தல் நேரத்தில் நெருக்கடி கொடுக்க முடியும் என பாஜகவினர் நினைக்கிறார்கள். ஆனால் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், திமுக அணி புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் வெற்றி பெறும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழக அரசு ஏராளமானத் திட்டங்களை மக்களுக்கு செய்துள்ளது. சுமார் 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. இது நிச்சயமாக திமுக அணிக்கு கை கொடுக்கும்.
எங்களுடைய நோக்கம், ஆளுநரை மாற்ற வேண்டும் என்பதுதான். இதற்காகத்தான், ஏற்கனவே 50 லட்சம் கையெழுத்துக்களை வாங்கி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஆளுநருக்கு எதிரான நிலைப்பாடு தொடரும்.
தற்போது என்.சி.ஆர்.பி பாடத்திட்டத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது ஒரு புது சர்ச்சையை உண்டாக்கும். இராமாயணம், மகாபாரதத்தை கொண்டு வந்தால், பைபிள் மற்றும் குரானில் உள்ள நல்ல செய்திகளையும் கொண்டு வர வேண்டும். நாங்கள் மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் மதத்தை வைத்து மோதலை உருவாக்குவதைதான் வன்மையாக கண்டிக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் ஆட்டோ ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் சிக்கிய ரூ.2.1 கோடி பணம்.. நடந்தது என்ன?