சேலம்:தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கூடாது என்று கர்நாடக மாநில அரசை வலியுறுத்தி அம்மாநிலத்தில் நாளை (செப்.26) எதிர்க்கட்சிகள் பந்த் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், இன்று (செப்.25) பெங்களூரு நைஸ் ரோடு பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து லாரிகள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் லாரி டிரைவர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், லாரிகளும் கடும் சேதம் அடைந்துள்ளன. இதனை அடுத்து, சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் தனராஜ் கூறுகையில், “காவிரி நதிநீர் பிரச்சனை இரு மாநில அரசுகளின் பிரச்சனை. இருதரப்பும் பேசி தீர்க்க வேண்டிய விஷயம்.
இதில் தமிழக மக்களும், கர்நாடக மக்களும் சகோதரர்களாக வாழ்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு லாரிகள் மீது சிலர் இன்று தாக்குதல் நடத்தி உள்ளனர். கர்நாடக சகோதரர்கள் மீண்டும் இது போல நடக்க வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல, நாளை கர்நாடகாவில் நடைபெற உள்ள பந்த் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள், தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும்.