மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலும், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் மீது அண்மையில் நடைபெற்ற கொலைவெறித் தாக்குதலை கண்டித்து சேலத்தில் ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்! - மருத்துவர்கள் மீதான தாக்குதல்
சேலம்: மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், மருத்துவ பாதுகாப்பு சட்டத்தை தீவிரப்படுத்த வலியுறுத்தியும் சேலம், நாமக்கல், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணிந்தவாறு கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் மருத்துவர்கள், மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதேபோன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று காலை திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.