தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவியதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் கேட்டதற்கு, "எதுவுமே போலி இல்லை, எதிலும் உண்மை இல்லை, எதிலும் உண்மை இல்லாமலும் இல்லை" என மழுப்பலான பதிலைக் கூறினார்.
இதனிடையே திமுக கூட்டணியிலுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரனுக்கும் காங்கிரசுக்குமிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி கொங்குமண்டல காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது .
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில்,"திமுக அலுவலகத்திற்கு வெளியே பத்திரிகையாளரைச் சந்திக்கும்போது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
ஈஸ்வரன் நாமக்கல் மாவட்டத்தில் அவர் கட்சிக்கு கூட்டணியில் ஒதுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு, தங்களிடம் பேச்சுவார்த்தைகூட நடத்தாமல் காங்கிரஸ் கட்சி அவர்களது வேட்பாளரை நிறுத்தினார்கள் என்று வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஒரு சில விஷயங்களை இந்தப் பதிவின் மூலமாக ஈஸ்வரனுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் நியமித்த உள்ளாட்சித் தேர்தலுக்கான பேச்சுவார்த்தைக் குழுவும் திமுகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருக்குமிடையே டிசம்பர் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பேச்சுவார்த்தை நடந்தது.
ஐந்து நாட்கள் பேச்சுவார்த்தை நடந்த பிறகு, 17ஆம் தேதி இரவு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்ததில் நானும் திமுக செயலாளரும் கையெழுத்திட்டோம். அந்த ஒப்பந்தத்தின்படி ஆறாவது வார்டு வெண்ணந்தூர் வட்டாரம் சார்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினரிடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.