இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டபேரவை பொதுத் தேர்தல் 2021ஐ முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டபேரவைத் தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் விளம்பர செலவினங்களைக் கண்காணித்து, கணக்கிட்டு, தேர்தல் செலவு கணக்கீட்டாளருக்கு நாள்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.
இதனைக் கண்காணிப்பதற்கும், தேர்தல் விளம்பர செலவினங்களை கணக்கிடுவதற்கும், சேலம் மாவட்டத் தேர்தல் அலுவலர் தலைமையில் ஊடக சான்றளிப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, அக்குழு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 128இல் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலத்தில் செயல்பட்டு வருகின்றது. மேலும், தொலைக்காட்சிகள், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளை கண்காணிப்பதற்கும் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான செய்திகளோ, அனுமதி பெறாத விளம்பரங்களோ வெளியிடப்படுகின்றதா என்பதைக் கண்காணிப்பதற்கும் இவ்வலுவலக முன் அறையில் ஊடக கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு அதில் 10க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அவர்களை சார்ந்தோர்கள் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகள், எப்.எம் ரேடியோக்களில் விளம்பரம் செய்ய விரும்புவோர் அவ்விளம்பரத்தினை வெளியிடுவதற்கு முன் ஊடகச் சான்றளிப்பு, கண்காணிப்புக் குழுவிற்கு விண்ணப்பித்து உரிய அனுமதி பெற்று, அந்த அனுமதி எண்ணுடன் விளம்பரம் வெளியிட வேண்டும்.