தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்சியருக்கும் மக்களவை உறுப்பினர்களுக்கும் இடையே காரசார விவாதம்! - தர்மபுரி மக்களவை உறுப்பினர்

சேலம்: திமுக மக்களவை உறுப்பினர்களுக்கும் ஆட்சியருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

ஆட்சியர் கூட்டம்
ஆட்சியர் கூட்டம்

By

Published : Oct 3, 2020, 10:43 PM IST

சேலம் மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் பணிகள் குறித்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு - கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு, கண்காணிப்புக் குழுத் தலைவர் எஸ்.ஆர். பார்த்திபன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளைச் சென்றடையவில்லை எனப் புகார் தெரிவித்தனர்.

மேலும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் அளிக்கும் எந்த ஒரு புகாருக்கும், உரிய அரசு அலுவலர்கள் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றம்சாட்டினர். தொடர்ந்து இதே நிலை நீடிக்கும்பட்சத்தில் உரிய அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

கூட்டத்தில் பேசிய தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மத்திய அரசின் சார்பில் எந்தெந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன என்பது குறித்து கேள்விகளை எழுப்பினார்.

மேலும் மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து குழு உறுப்பினர்களுக்கு எந்த அலுவலர்களும் தகவல் அளிப்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

இதற்குப் பதிலளித்த சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை உறுப்பினருக்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அறிதல் இருக்கிறதா? இல்லையா? என்று எதிர்க் கேள்வி எழுப்பினார்.

இதனால் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களவை உறுப்பினருக்கும் ஆட்சியருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

பின்னர் செந்தில்குமார் கேட்ட விவரங்கள் அனைத்தும், நவம்பர் 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்னதாக அவரிடம் ஒப்படைக்கப்படும் என்று ஆட்சியர் அவரிடம் உறுதியளித்து விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்தக் கூட்டத்தில், மக்களவை உறுப்பினர்கள் செந்தில்குமார், சின்ராஜ், சந்திரசேகரன், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் திவாகரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details