தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இனி ஏற்காட்டில் 'கேம்ப் பயர்' நடத்தவும்; பொது இடங்களில் புகைப்பிடிக்கவும் தடை! - செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம்

சேலம் ஏற்காடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்லவும், பொது இடங்களில் புகைப்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இனி ஏற்காட்டில் 'கேம்ப் பயர்' நடத்த தடை- மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு
இனி ஏற்காட்டில் 'கேம்ப் பயர்' நடத்த தடை- மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

By

Published : Feb 15, 2023, 3:49 PM IST

இனி ஏற்காட்டில் 'கேம்ப் பயர்' நடத்தவும்; பொது இடங்களில் புகைப்பிடிக்கவும் தடை!

சேலம்மாவட்ட மலைப்பகுதிகளில், கோடைகாலத்தில் ஏற்படும் காட்டுத்தீ மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று(பிப்.15) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சேலம் வன அலுவலர், ஆத்தூர் வன அலுவலர் , தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்டப் பல்வேறு துறைகள் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறும்போது, 'சேலம் மாவட்டத்தில் 28 சதவீதம் வனப்பகுதி உள்ளது. கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் வனத்தீ முன்னெரிக்கை நடவடிக்கையாக வனத்துறை, தீயணைப்புத்துறை, கிராமப் பஞ்சாயத்து, வருவாய்த்துறை இணைந்து ஆலோசிக்கப்பட்டது.

வனத்தீயை கட்டுப்படுத்த எளிதில் தீ பற்றும் பொருட்கள் ஏற்காடு மற்றும் மலைப்பகுதிக்கு எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீயினை தடுப்பது குறித்து வனப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துகளை கண்காணிக்கும் வகையில், வனப்பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலைக் கிராமங்களில் குப்பைகளை எரிக்கக் கூடாது. சுற்றுலா பயணிகளின் சாகசங்களால் தீ விபத்து ஏற்படாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் 'கேம்ப் பயர்' அமைக்கவும், மலைப்பாதையில் மது அருந்துதல், புகைப்பிடித்தல் ஆகியவை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் வனவிலங்குகள் தண்ணீர் அருந்துவதற்கு வசதியாக ஏற்காட்டில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

ஏற்காட்டில் வெளியூர் மக்களினால் ஏற்படும் பாதிப்புகளே அதிகம். அதனைத் தடுக்க வாரவிடுமுறை நாட்களில் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அனுமதி பெற்று சில்வர் ஓக் மரங்கள் வெட்டப்படுகின்றன. இது கடத்தல் ஆகாது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மரத்தை வெட்டினால் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றுலாப் பயணிகள் மலைப்பகுதியில் சென்று வரலாம். ஆனால், கட்டாயம் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை வனப்பகுதிக்கு எடுத்துச்செல்லக்கூடாது. மீறி எடுத்து செல்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்!

ABOUT THE AUTHOR

...view details