சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் இயங்கி வரும் தனியார் நிறுவனம், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் 30 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
டிஜிட்டல் கரன்சி மூலம் இளைஞர்களிடம் லட்ச கணக்கில் மோசடி!
சேலம்: டிஜிட்டல் கரன்சி மூலம் இளைஞர்களிடம் லட்ச கணக்கில் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக தனியார் நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் சதீஷ் கூறுகையில், ‘பெயர் தெரியாத தொலைபேசி அழைப்பு மூலம் எங்களுக்கு வந்த தகவலை நம்பி, தொடர்பு கொண்ட நபர் அளித்த முகவரிக்கு சென்றோம். அங்கு பணத்தை இரட்டிப்பாக்கி தரும் திட்டம் மூலம் பல ஆயிரம் பேருக்கு நன்மை செய்துள்ளோம் என்று காயின் நிறுவன உரிமையாளர்கள் ஜெயராமன், காசிலிங்கம் ஆகியோர் எங்களை மூளைச்சலவை செய்தனர்.
பின்னர் எங்களிடம் இருந்து ஒவ்வொரு நபரிடமும் தலா ஒரு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டனர். அந்த ஒரு லட்சம் ரூபாயை 12 மாத காலத்திற்குள் மூன்று லட்ச ரூபாயாக திருப்பித் தருவோம் என்று உறுதி அளித்தனர். இதை நம்பி நாங்களும் அவர்களிடம் பணத்தை கொடுத்தோம். இதேபோல சேலத்தில் 300க்கும் மேற்பட்டோர் ஒரு லட்சம் ரூபாய் வீதம் பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.