சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த பெரியகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ரஞ்சிதாவுக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது பள்ளியில் அவருடன் படிக்கும் சக மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளி பணியாளர்கள் என அனைவருக்கும் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மாணவி தங்கியிருந்த மாணவியர் விடுதியையும் மாவட்ட சுகாதாரத் துறை மூடியுள்ளது. இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் செல்வகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில்," கடந்த 19ஆம் தேதி மாணவி தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்துள்ளார்.
இந்நிலையில், இன்று மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாணவியுடன் படிக்கும் சக மாணவியர், அவரது விடுதி அறையில் அவருடன் தங்கியிருந்த மாணவிகள் என 36 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பெரியகிருஷ்ணாபுரம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.