கரோனா தொற்று தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்துவருகிறது. சேலத்தைப் பொறுத்தவரை 32 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இவர்களில், 20 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 8 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா ஆய்வகத்தில், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து வந்த 8,221 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், 111 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வார்டுகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் பேட்டி இந்தச் சூழ்நிலையில், சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறித்து நமது ஈடிவி பாரத்துக்கு பேட்டியளித்த சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன், "32 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே, பொதுமக்கள் கரோனா குறித்து அச்சம்கொள்ள வேண்டாம்.
தற்போது, சேலம் மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 10ஆம் தேதிக்குள் சேலம் மாவட்டத்தில் கரோனா பாதித்த அனைவரும் பூரண நலம்பெற்று வீடு திரும்புவார்கள். அரசு வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு முறைகளை முழுமையாகக் கடைப்பிடித்தாலே சேலம் மாவட்டத்திலிருந்து கரோனா வெளியேறிவிடும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'அரசு அறிவிப்பு வரும்வரை ஊரடங்கில் தளர்வு இல்லை'