தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ஒவ்வொருவரும் 5 மரங்கள் நடுங்கள்...’ - சேலம் டூ சென்னை சைக்கிள் பேரணி!

சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஐந்து மரக்கன்றுகளை நட வேண்டும் என வலியுறுத்தி சேலத்திலிருந்து சென்னைக்கு சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

By

Published : Aug 8, 2021, 7:30 PM IST

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நீண்ட நாள் கனவுத் திட்டமான பசுமைப் புரட்சி திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஒவ்வொருவரும் ஐந்து மரக்கன்றுகளை நட வேண்டும் என வலியுறுத்தி, ’மக்கள் தாய் பூமி’ என்ற அமைப்பினர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியைத் தொடங்கி உள்ளனர்.

அதன்படி, இன்று (ஆக.08) சேலம் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கிய இந்த சைக்கிள் பேரணியில், சாரதா கல்லூரி சாலை வழியாக ஐந்து ரோடு சென்று, அங்கிருந்து பைபாஸ் வழியாக சென்னைக்கு பயணித்து வருகின்றனர்.

இந்தப் பயணத்தில் ஒவ்வொரு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி, அனைவரும் மரக்கன்றுகள் நட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி சைக்கிள் பேரணி மேற்கொண்டுள்ளனர்.

இந்த பேரணி குறித்து பேசிய மருத்துவர் சிவராஜ், "சேலத்திலிருந்து சைக்கிள் மூலம் சென்னைக்கு பேரணியாகச் சென்று வழி தோறும் மக்கள் மத்தியில் மரங்களை நடவேண்டும், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

நாளை காலை சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவல் துறை இயக்குனரை நேரில் சந்தித்து எங்களது இந்த முயற்சிக்கு ஆதரவு கோர உள்ளோம். மாநிலம் முழுவதும் இதை ஒரு இயக்கமாகவே எடுத்துச் செல்ல அவரிடம் வலியுறுத்துவோம்” என்று தெரிவித்தார்.

இந்த சைக்கிள் பேரணியில் மருத்துவர்கள், கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details