சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் இன்று திரளாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மோசடி புகார் ஒன்று அளித்தனர். அந்த மனுவில்," சேலம் மாவட்டத்தில் களஞ்சியம் என்ற பெயரில் 500க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகிறது. இதில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினராக இருக்கிறோம். எங்களுக்கு சுயதொழில் செய்வதற்காக வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டுவருகிறது .
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக சேலத்தில் தொடங்கப்பட்ட ஏஸ் பவுண்டேசன் நிறுவனம் மகளிர் சுய உதவிக் குழு தலைவர்களின் அனுமதி இல்லாமல் பல கோடி ரூபாய் பணத்தை வங்கிகளில் துணையுடன் பரிமாற்றம் செய்துள்ளது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்து பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை கூறுகையில், “களஞ்சியம் மகளிர் சுய உதவிக் குழுவில் 240 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருக்கிறது. இதை மாவட்ட ஆட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . இல்லை என்றால் நாங்கள் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து எங்களது கோரிக்கையை அளிக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.