தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவமனையில் சசிகலா: சதி வேலை காரணமா? முத்தரசன் சந்தேகம் - salem district news

சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதற்கு பின்னால் சதி நடந்து இருக்கலாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் சந்தேகம் எழுப்பி உள்ளார்.

cpi mutharasan raised doubt on Sasikala hospital treatment
மருத்துவமனையில் சசிகலா: சதி வேலை காரணமா? முத்தரசன் சந்தேகம்

By

Published : Jan 26, 2021, 4:39 PM IST

சேலம்:இந்தியாவின் 72ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். மேலும், அங்கு இருந்த பாரதியார் சிலைக்கு மாலை அணிவி்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டங்களுக்கு தடை விதித்திருப்பது மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலாகும். இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கிராமசபை கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாட அரசு அளித்துள்ள விளக்கம் கேலிக்குரியது.

முகக்கவசம் அணியாத முதலமைச்சர்

முதலமைச்சர் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பரப்புரை செய்கிறார். அங்கு பெரும்பான்மையானவர்கள் முகக்கவசம் அணிவது இல்லை, முதலமைச்சரும் முகக்கவசம் அணியாமல் பரப்புரை செய்கிறார். கிராமசபை கூட்டம் நடத்தினால் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என மத்திய, மாநில அரசுகள் அச்சம் கொண்ட காரணத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மோடியிடம் முதலமைச்சர் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாட்டில் டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் கண்டு நாங்கள் அஞ்சமாட்டோம். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை திட்டமிட்ட போராட்டங்கள் நடைபெறும்.

முத்தரசன்

மருத்துவமனையில் சசிகலா: சதி!

சசிகலா விடுதலை ஆவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுவது மக்களிடையே ஒரு ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் டெல்லி சென்று பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து விட்டு வெளியே வந்தவுடன் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நிதி கேட்டு உள்ளோம் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது போன்ற எந்தத் தகவல்களையும் செய்தியாளர்களிடம் தெரிவிக்காமல், மாறாக சசிகலாவுக்கு அதிமுகவில் அனுமதி இல்லை என்று கூறுகிறார்.

அடுத்தநாள் சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இதன் பின்னணியில் சதி இருக்குமோ என்று பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகிறது. அந்த ஐயப்பாடு எனக்கும் உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் 100 நாட்களில் மக்களின் குறைகளை தீர்த்து வைக்க தனித்துறை ஏற்படுத்தப்படும் என்று கூறியிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

ஸ்டாலின்- வேல்

முருகன் தமிழ் கடவுள். தமிழ்நாட்டுக்கு சொந்தமானவர். சாதி வேறுபாடு பார்க்காதவர். அவரை யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டில் வணங்கலாம். வேலை கையில் எடுக்கலாம். ஆனால், வட இந்தியாவில்தான் அவருக்கு அனுமதி இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திமுக தொடங்கியபோதே, அண்ணா கூறிவிட்டார். அதனால் ஸ்டாலின், வேலை கையிலெடுத்ததையெல்லாம் சர்ச்சையாக்கத் தேவையில்லை. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு இழப்பை கொண்டு வந்துள்ளது. எனவே, முதலமைச்சர் அறிவித்தபடி நிவாரணம் வழங்கிட வேண்டும். தமிழ்நாட்டில் மூன்றாவது அணி என்பது சாத்தியமில்லை திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி மிகவும் பலமாக உள்ளது.

அதிமுக கூட்டணிதான் குழப்பத்தில் உள்ளது. கேரள சட்டசபையில் நிறைவேற்றியது போன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும். மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓ. பன்னீர்செல்வம் ஒருமுறைகூட ஆறுமுகம் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை. இது மக்கள் வரிப் பணத்தை வீணடிக்கும் கண்துடைப்பு ஆணையம்" என்றார்.

இதையும் படிங்க:மு.க.ஸ்டாலின் 'வேல்'லை கையில் எடுப்பதில் தவறில்லை: ஈஸ்வரன்

ABOUT THE AUTHOR

...view details