இலவச வீடு, வீட்டுமனை, இலவச பட்டா வழங்கக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அகில இந்திய தொழிற்சங்க மையம் கவுன்சில் சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் குறித்து அகில இந்திய தொழிற்சங்க மத்திய கவுன்சிலின் சேலம் மாவட்ட செயலாளர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நகர்ப்புற ஏழைகள், உழைக்கும் மக்கள் என மூன்று லட்சம் பேர் சேலம் மாநகரில் சொந்த வீடில்லாமல் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள்.
இவர்களின் வாழ்வுநிலை மிகவும் மோசமாக உள்ளது. கூலிகளாக நகரம் முழுவதும் அலைந்துதிரிந்து பணியாற்றி மாதந்தோறும் அவர்கள் பெரும் சம்பளம் வெறும் 8,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை மட்டுமே.
ஆனால், அவர்கள் வாடகை வீட்டிற்கு செலுத்தும் மாத வாடகை 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை உள்ளது. அவர்களின் வருமானத்தில் 30 விழுக்காடு வாடகைக்கே செலவிட வேண்டியுள்ளது. சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ஏழைகளுக்கு தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பிலே இருக்கிறது.
அகில இந்திய தொழிற்சங்க மையம் கவுன்சில் சார்பில் நடைபெற்ற தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் அதே நேரத்தில் சேலம் மாநகரில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் குடிசைமாற்று வாரியத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட 10 ஆயிரம் வீடுகளுக்கு உலக வங்கி நிபந்தனைகளின்படி அநியாயமாக நிறுத்தப்பட்ட தொகை காரணமாகவும் ஐயாயிரம் குடும்பங்கள் பட்டா, கிரயம் ஆகியவை பெற முடியாமல் தவித்துவருகின்றனர்.
எனவே, சேலத்தில் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் இலவச வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட நகர்ப்புற ஏழைகளுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து எடுத்திட வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆற்றில் வேன் கவிழ்ந்து விபத்து -12 பேர் காயம்!