தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 13, 2021, 4:01 PM IST

ETV Bharat / state

'முகக்கவசம் அணியாவிட்டால் சரக்கு கிடையாது' அமைச்சர் தகவல்!

முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட கரோனா தொற்று விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

minister senthil balaji
minister senthil balaji

சேலம்:தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று (ஜூன்.13) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,’கரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளன.

கரோனா விதிகள்

முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு கட்டாயம் மது வழங்கப்படாது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

இதனை கண்காணிக்கவும், கடை விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கிலும் காவல்துறையினர் அங்கு நிறுத்தப்படுவார்கள்.

சட்டவிரோத மது விற்பனை

மது விற்பனை செய்யப்படும் 27 மாவட்டங்களுக்கு, பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி, தற்போது வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரும் மதுபானங்கள் எவ்வாறு காவல்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதோ, அதுபோல நடவடிக்கை எடுக்கப்படும்.

கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறக்கூடாது, சட்டவிரோதமாக ஒரு சொட்டு சாராயம் கூட விற்பனைக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே, இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

காவல்துறையினர் அதிகளவில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தமிழ்நாடு கள்ளச்சாராயம் இல்லாத மாநிலமாக விரைவில் மாற்றப்படும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கரோனா நோயால் இறப்பவர்கள், உயிரிழக்கும்போது நெகடிவ் ரிசல்ட் வழங்கப்பட்டு இருந்தால், அவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் உள்ளது.

இறப்பு சான்றிதழ்

கரோனா பாதிக்கப்பட்டு இறப்பவர்களுக்கு, கரோனாவால் இறந்தார் என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால், அது தொடர்பாக ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்க பரிசீலனை செய்யப்படும்.

சேலம் மாவட்டத்தில் 10 நாட்களுக்கு முன்பு இருந்ததைவிட, தற்போது நோய்த் தொற்று படிப்படியாக குறைந்துவருகிறது. பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் விரைவில் நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக மாறும்" என்றார்.

இதையும் படிங்க: உயர் அலுவலர்களின் மெயில் ஐடி ஹேக்? ஒன்றிய அரசின் எச்சரிக்கையால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details