சேலம்: பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகாரில், சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாமிநாதன் உள்ளிட்ட மூன்று பேர் மீது, ஊழல் தடுப்புப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, பேராசிரியர் சாமிநாதன் துணை வேந்தராகப் பதவி வகித்தார்.
அப்போது பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லா ஊழியர்களை நியமனம் செய்ததில் முறைகேடு நடந்ததாக சென்னை ஊழல் தடுப்பு இயக்குநரகத்திற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் அனுப்பப்பட்டது.
கண்டறியப்பட்ட முறைகேடு
இந்தப் புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர் பதவிகளுக்கு 154 பேர், ஆசிரியர் அல்லாத ஊழியர் பணிக்கு 47 பேர் ஆகியோர், முறைகேடாக நியமனம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து முறைகேடாக நியமனம் செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்கள் தணிக்கை செய்யப்பட்டன. இந்த தணிக்கையில் அவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் 'போலி' என்று தெரியவந்தது.
ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு
இந்த நிலையில் ஊழியர் நியமனத்தில் முறைகேடு நடந்தப் புகாரின் அடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சாமிநாதன் மற்றும் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து ஆகியோர் மீது கூட்டு சதி, ஏமாற்று வேலை, மோசடி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் சேலம் மாவட்ட லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினர் இன்று(அக்.6) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் கல்வியாண்டுகளில், முறையான கட்டமைப்பு இல்லாத கல்லூரிகளில், புதிய பாடப்பிரிவுகள் தொடங்கவும் முறைகேடாக அனுமதி அளித்து இருப்பதும் தற்போது அம்பலமாகியுள்ளது.