தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா சிறப்பு மருத்துவ முகாமினை ஆய்வு செய்த சேலம் மாநகராட்சி ஆணையர் - சேலம் சிறப்பு மருத்துவ முகாம்

சேலம்: 2 ஆயிரத்து 472 சிறப்பு மருத்துவ முகாம்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 816 நபர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என சிறப்பு மருத்துவ முகாமினை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

கரோனா சிறப்பு மருத்துவ முகாமினை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் சதீஸ்
கரோனா சிறப்பு மருத்துவ முகாமினை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் சதீஸ்

By

Published : Sep 6, 2020, 4:32 PM IST

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று நோய் பரவுவதை முற்றிலுமாக தடுத்திடும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களிடையே கரோனா தொற்று நோய் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்வதுடன், மாநகரில் வசிக்கக்கூடிய அனைத்து பொதுமக்களின் உடல்நிலையை கண்காணித்து அவர்களை தொற்றுநோயில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து மாநகரப் பகுதிகளில் ஜூலை 10ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை 976 சிறப்பு மருத்துவ முகாம்கள் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் நடத்தப்பட்டன.

இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருதி 56 மருத்துவ குழுக்கள் மூலம் தினந்தோறும் 136 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டு, ஜூலை 10ஆம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரையிலான 57 நாள்களில் மொத்தம் 2 ஆயிரத்து 472 சிறப்பு மருத்துவ முகாம்களில் நடத்தப்பட்டதில், இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 816 நபர்களுக்கு மருத்துவக் குழுவினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் கரோனா தொற்று நோய் அறிகுறிகளான காய்ச்சல், வறட்டு இருமல், சளி, உடல் சோர்வு, மூச்சுத் திணறல் போன்ற நோய் அறிகுறிகள் உள்ள 7 ஆயிரத்து 291 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கரோனா தொற்று நோய் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், பரிசோதனையின் முடிவில் 283 நபர்கள் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு சம்மந்தப்பட்டவர்களை அரசு பொதுமருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 60 வயதிற்கும் மேற்பட்ட 18 ஆயிரத்து 386 நபர்களுக்கும், 1,632 கர்ப்பிணி தாய்மார்களுக்கும், 2 ஆயிரத்து 489 குழந்தைகளுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இம்மருத்துவ முகாம்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் 6 ஆயிரத்து 373 நபர்களுக்கும் உயர் இரத்த அழுத்தமும், 4 ஆயிரத்து 359 நபர்களுக்கு நீரிழிவு நோயும், 3 ஆயிரத்து 696 நபர்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் என பாதிக்கப்பட்ட 14 ஆயிரத்து 428 நபர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு 2 மாதத்திற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இச்சிறப்பு முகாம்களுக்கு வரும் அனைத்து பொதுமக்களுக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர், ஹோமியோபதி மாத்திரைகள், வைட்டமீன் ஏ மாத்திரைகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

பின்னர் அம்மாபேட்டை மண்டலம் கோட்டம் எண்.37 சித்தி விநாயகர் கோயில் தெரு, கோட்டம் எண்.39 பீரன்ன எல்லப்பன் தெரு, கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண்.48 குகை லைன் ரோடு மற்றும் கோட்டம் எண்.56 வடக்கு முனியப்பன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்து முகாமினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

மேலும் மாநகரப் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் இச்சிறப்பு மருத்து முகாம்களில் கலந்து கொண்டு தங்களின் உடல்நிலையை பாதுகாத்துக் கொள்ளுமாறும், பணியிடம் மற்றும் அத்தியாவசிய கடைகள் உள்ளிட அனைத்து இடங்களுக்கு செல்லும் போதும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியினை கடைபிடித்து தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details