சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.965 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் 81 எண்ணிக்கையிலான பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகரப் பகுதிகளில் வசிக்கக் கூடிய குழந்தைகள், மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களின் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளும் வகையிலும் பல்வேறு அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் சாதனங்களின் செயல் விளக்கங்களை அறிந்து கொள்ளும் வகையிலும் மாநகரப் பகுதியில் அறிவியல் பூங்கா அமைத்திட மாநகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் சூரமங்கலம் மண்டலத்திற்குள்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் அறிவியல் பூங்கா அமைப்பதற்கான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு, அரசின் ஒப்புதல் பெற்று ரூ.5 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த அறிவியல் பூங்கா கட்டுமான பணிகளை நகராட்சி ஆணையர் சதீஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையர் கூறுகையில், “விண்வெளி ஆய்வுகளுக்காக பயன்படுத்தும் ஜி.எஸ்.எல்.வி , பி.எஸ்.எல்.வி ராக்கெட் மாதிரிகள் அமைக்கப்பட்டு வருகிறது. விண்வெளியில் ஏற்படும் சந்திர, சூரிய கிரகணங்கள் போன்ற நிகழ்வினை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் 30 பேர் அமர்ந்து காணக்கூடிய கோளரங்கம் அமைக்கப்படவுள்ளது.