தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனா சமூக பரவல் நிலையை அடையவில்லை' - எடப்பாடி பழனிசாமி

சேலம்: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் (தீநுண்மி) சமூக பரவல் நிலையை அடையவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

By

Published : Jun 11, 2020, 1:56 PM IST

சேலம் மாவட்டம் 5 ரோட்டில் ரூ.441 கோடி மதிப்பில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தினை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று திறந்துவைத்தார்.

அந்தத் திறப்பு நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செம்மலை, சக்திவேல், வெங்கடாசலம், சித்ரா, மருதமுத்து, சின்னத்தம்பி உள்ளிட்டோர், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், "சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 2016ஆம் ஆண்டு இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்காக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். அதையடுத்து பணிகள் விரைவாக நடைபெற்று 7.8 கி.மீ. நீளத்தில் தமிழ்நாட்டின் முதல் நீண்ட ஈரடுக்கு மேம்பாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது.

அதன்மூலம் சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும். அதையடுத்து வணிகப் பகுதியான லீபஜார் மார்க்கெட் ரயில் நிலையத்திற்கு இடையே புதிய மேம்பாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், சேலம் நீதித் துறை சார்பில் சட்டக் கல்லூரி, மாணவர்களுக்கு விடுதிக் கட்டடம் உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது" என்றார்.

எடப்பாடி பழனிசாமி
அதன்பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர், "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கரோனா தீநுண்மி அனைத்து மாவட்டங்களிலும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மறைப்பதற்கு எதுவுமில்லை.

தமிழ்நாடு அரசு வெளிப்படையாக விவரங்களை வெளியிட்டுவருகிறது. நோய்ப் பரவலைத் தடுக்க மருத்துவ வல்லுநர்கள், மருத்துவத் துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்தின் அடிப்படையில்தான் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது" எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், "கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பவர்கள் பெரும்பாலும் ஏற்கனவே ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட நோய்வாய்ப்பட்டவர்கள் என மருத்துவக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

கரோனா தீநுண்மி புதிய வகை நோய். உரிய பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே அதனை ஒழிக்க முடியும். அதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இறுதியாக அவர், "தமிழ்நாட்டில் கரோனா தீநுண்மி சமூகப் பரவல் நிலையை அடையவில்லை. சென்னையில் மக்கள்தொகை அதிகமாக இருப்பதால் குறுகிய சாலைகள், வீதிகள், அடுக்குமாடிக் கட்டங்கள் உள்ளிட்ட பகுதியில் குறைவான பரப்பளவில் அதிக மக்கள் வசிக்கின்றனர்.

அதனால் தொடர்புச் சங்கிலி காரணமாகக் கரோனா பரவிவருகிறது. அதைவைத்து சமூகப் பரவல் எனச் சொல்வது தவறு" எனத் தெரிவித்தார்.

மேலும் சேலத்தின் புதிய ஈரடுக்கு மேம்பாலத்தின் குரங்குச்சாவடி பகுதி மேம்பாலத்திற்கு ஜெயலலிதா பெயரும், ஏவிஆர் ரவுண்டானா மேம்பாலத்திற்கு எம்ஜிஆர் பெயரும் அரசு சார்பில் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விளக்குக் கம்பங்கள் அமைக்காமலேயே திறந்துவைக்கப்பட்ட பாலம்!

ABOUT THE AUTHOR

...view details