சேலம்:சிவதாபுரம் அடுத்த திருமலைகிரி ஊராட்சி பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த வியாழக்கிழமை இரவு கோயில் நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது அங்கு சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன பிரிவைச் சேர்ந்த இளைஞர் பிரவீன் போதையில் சென்று உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த திருமலைகிரி ஊராட்சிமன்றத் தலைவர் மாணிக்கம் அங்கு சென்று பிரவீனை கண்டித்ததாகவும், அப்போது சாதி குறித்து தகாத வார்த்தையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக தமிழக அளவில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இரும்பாலை போலீசார் திருமலைகிரி ஊராட்சிக்கு சென்று பட்டியலின மக்கள் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர் மாணிக்கம் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இருதரப்பும் சமாதானம் செய்து கொண்டதாகவும் பிரச்சனை எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்று இரு தரப்பினரும் விரும்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் திருமலைகிரி ஊராட்சி ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்த விசிக மாநில தொண்டரணி செயலாளர் இமயவரம்பன், இளைஞர் பிரவீன் மற்றும் அவரின் தந்தை செந்தில்குமார் ஆகியோரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இமயவரம்பன், ”கடந்த நூற்றாண்டுகளாக இந்த பகுதியிலே நிலவி வந்த சாதிய சமூக கொடுமைகள், கடந்த சில வருடங்களாக தீர்க்கப்பட்டு அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாக அண்ணன் தம்பி போல் பழகி வருகின்றனர்.
இதுபோன்ற சூழலில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு இளைஞர் ஒரு பகுதியிலே இருக்கின்ற அம்மன் ஆலயத்திற்குச் சென்று இருக்கிறார். அதற்கு திமுகவினுடைய ஒன்றிய கழகச் செயலாளர் மாணிக்கம் அவர்கள், தம்பியிடம் தகாத வார்த்தைகளால் பேசி மிகவும் புண்படுத்தி இருக்கிறார்.
இந்த நேரத்திலே விடுதலைக்குச் சிறுத்தைகள் சார்பில் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்னவென்றால் தமிழகத்தில் நல்லாட்சி வழங்கிக் கொண்டிருக்கின்றார், தளபதியார். அவர்களுடைய ஆட்சியிலே இந்த விரும்பத்தகாத சம்பவம் என்பது பட்டியலின மக்கள் அனைவருக்குமே மிகுந்த மன வருத்தத்தை தருகின்றது. எனவே உடனடியாக தமிழக அரசும் காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.