உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதி சர்வதேச தர தினம் (World Quality Day) கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், சர்வதேச தர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தூய்மைப் பணிகளில் ஈடுபடுமாறு தமிழ்நாடு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச தர தினத்தையொட்டி, மெகா தூய்மைப்படுத்தும் பணி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தூய்மைப்படுத்தும் பணிகளைத் தொடங்கிவைத்தார்.
இதையடுத்து, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ - மாணவியர், துப்புரவு ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.