சேலம் மாவட்டத்தில் 1907ஆம் ஆண்டு காலகட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையைப் போக்க, ஆங்கிலேய அரசாங்கத்தினால், பனமரத்துப்பட்டி மலைக் குன்றுகள், அடிவாரங்களில் இருந்த 18 கிராமங்களை காலி செய்து சுமார் 2,400 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட கட்டமைகளுடன் பனமரத்துப்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது. மேலும் இந்த ஏரியின் நீர் ஆதாரமாக சருகு மலை, போதமலை , காப்புக்காடு ஆகிய வனப்பகுதிகள் அமையும் வகையிலும் நீரோடைகள், கால்வாய்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த ஏரியானது சேலம் மாநகருக்கு ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலும், அதன் பின்னரும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்துள்ளது. அதற்கென மூன்று பிரமாண்ட தொட்டிகள் அமைக்கப்பட்டு அவற்றில் கூழாங்கற்கள், ஆற்றுமணல் நிரப்பப்பட்டு ஏரியிலிருந்து கொண்டுவரப்பட்ட நீரை சுத்திகரித்து பாதுகாப்பான குடிநீராக மாற்றி சேலம் மாநகரம் மற்றும் ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய பகுதி வாழ் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இயற்கை எழில் கொஞ்சும் இடமாக பனமரத்துப்பட்டி ஏரி விளங்கிய காலம் என்று ஒன்று உண்டு. அந்த காலகட்டத்தில் மக்களால் பெரிதும் விரும்பி ரசிக்கப்பட்ட நடிகர்கள் பலரும் நடித்த திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் பனமரத்துப்பட்டி ஏரி அருகில் கட்டப்பட்ட சுற்றுலா மாளிகையில் தங்கி படப்பிடிப்பு நடத்தியதாகவும் கிராம மக்கள் நினைவு கூருகின்றனர்.
பனமரத்துப்பட்டி ஏரியின் அடிக்கரைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் பாக்கு, தென்னை, நெல், மஞ்சள், கரும்பு என நன்செய் பயிர்களை, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயிரிட்ட நிலை மாறி, தற்போது அரளிப் பூக்கள் உள்ளிட்ட மானாவாரிப் பயிர்களை மட்டுமே விளைவிக்கப்படும் புன்செய் காடாக மாறியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
பனமரத்துப்பட்டி ஏரியின் தற்போதைய அவல நிலை குறித்து மனம் வெதும்பி பேட்டியளித்த கிராமவாசி செல்வராணி கூறுகையில், "கடந்த இருபது ஆண்டுக்கு முன்பு வரை விவசாயம் செழித்து இருந்தது. தற்போது புன்செய் காடாக மாறிப்போன பனமரத்துப்பட்டி ஏரியின் அடிக்கரை நிலம் கழிவு நீரைக்கொண்டு அரளிப் பூக்கள் உள்ளிட்ட மானாவாரிப் பயிர்களை செய்யும் இடமாக மாறியிருக்கிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் ஏரியில் நிலத்தடி நீரை உறிஞ்சி, விஷமாக மாற்றும் முள் மரங்கள் நிறைந்த பகுதியாக மாறி இருப்பது, எங்களுக்கு கடுமையான மன உளைச்சலையும் வேதனையையும் தருகிறது.
பனமரத்துப்பட்டி ஏரி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதியில் படப்பிடிப்பு நடத்திய இயக்குநர்கள், நடிகர்கள் அனைவரும் தற்போது ஏரி உள்ள நிலையைப் பார்த்து எங்களுக்கு உதவ முன்வர வேண்டும். மீண்டும் இங்கே விவசாயம் செழித்து விவசாயிகள் நல்ல வாழ்க்கையை பெற, ஏரியைத் தூர்வார அரசு மற்றும் திரைப்பிரபலங்கள் முன்வர வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம்" என்று தெரிவித்தார்.
பனமரத்துப்பட்டியின் ஏரியின் அவல நிலை குறித்து விரிவாகப் பேட்டியளித்த ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பொன். சரவணன் கூறுகையில்,"ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்துப் பணிகள், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தில் குடிமராமத்துப் பணிகள் நடைபெறவில்லை. அதிலும் குறிப்பாக இந்த பனமரத்துப்பட்டி ஏரி தொடர்ந்து அதிமுக அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. குடிமராமத்து நாயகன், விவசாயிகளின் பாதுகாவலன் என்று முதலமைச்சரை அழைக்கும் அதிமுக நிர்வாகிகளே பனமரத்துப்பட்டி ஏரி தூர் வாரப் படுவதற்கும் முட்புதர்களை அகற்றுவதற்கும் தடையாக இருக்கிறார்கள்.