சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்திலான கால்நடை பூங்காவின் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று இன்று (ஜூன் 28) ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் அவர் பேசுகையில், “ தலைவாசலில் அமைக்கப்பட்டுவரும் கால்நடை பூங்கா மூலம் நமது நாட்டு இன மாடுகள், நாய்கள், கோழிகள் அழியாமல் பாதுகாக்கப்படும். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மீது கடையை மூடுவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் மர்மமான முறையில் கோவில்பட்டி மருத்துவமனையில் உயிரிழந்தனர் .
முதலமைச்சர் பழனிசாமி பேசிய காணொலி இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்திவருகிறது. இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விசாரணைக்கு வரும்போது அரசின் இந்த முடிவு தெரிவிக்கப்படும். நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்.
கரோனா வைரஸுக்கு இதுவரை எவ்வித மருந்தும் கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில், தமிழ்நாட்டில் அரசின் துரித நடவடிக்கையால் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுவருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, இங்கு இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. நோய் வந்தவர்களை குணப்படுத்த என்ன செய்ய வேண்டுமென கூறாமல் அரசின் நடவடிக்கைகளை மட்டுமே ஸ்டாலின் குறை சொல்லி வருகிறார். நாளை நடைபெறும் மருத்துவக் குழுவினரின் ஆலோசனைக்குப் பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: கரோனா தாக்கம்: 8 மாநிலங்களில் மட்டுமே 85% நோயாளிகள்; 87% உயிரிழப்பு!