வேட்பு மனு தாக்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை நேற்று (மார்ச். 16) தாக்கல் செய்தார். எடப்பாடி தொகுதியில் போட்டியடும் அவர் தனது வேட்புமனுவில், தன் குடும்பத்தினருக்கும் தனக்கும் சொந்தமாக உள்ள சொத்து விவரங்கள் குறித்துப் பதிவு செய்துள்ளார்.
அதில், தனது பெயரில் 47.64 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்து மட்டுமே உள்ளது என்றும், அசையா சொத்து வேறு ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், தனக்கு 15 லட்சம் ரூபாய் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அசையும், அசையா சொத்துகள் விவரம்
பிரமாணப் பத்திரத்தில் முதலமைச்சரின் மனைவி பி.ராதாவுக்கு அசையும் சொத்து 1.04 கோடி ரூபாய் உள்ளதாகவும், கூட்டுக் குடும்பப் பெயரில் அசையா சொத்து 50.21 லட்சம் ரூபாய் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், ஆறு லட்சம் ரூபாய் ரொக்கம் கையிருப்பு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மனைவி பி.ராதா 11 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கையிருப்பு வைத்துள்ளார்.
அதே போல் முதலமைச்சர் 100 கிராம் எடையில் 4.20 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்க நகைகளையும், அவரது மனைவி 30.24 லட்சம் ரூபாய் மதிப்பில் 720 கிராம் தங்க நகைகளையும் வைத்துள்ளனர்.
மனைவி பி.ராதா பெயரில் 1.78 கோடி ரூபாய் மதிப்பில் அசையா சொத்து இருப்பதையும், அதேபோல் கூட்டுக் குடும்பப் பெயரில் 2.90 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்து உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.