தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்த 10 நாள்களில் 2,000 மினி கிளினிக்குகள் திறப்பு - முதலமைச்சர்

சேலம்: தமிழ்நாடு முழுவதும் அடுத்த 10 நாள்களில் 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பழனிசாமி
பழனிசாமி

By

Published : Dec 17, 2020, 8:04 AM IST

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி 52ஆவது வார்டில், அமைக்கப்பட்டுள்ள மினி கிளினிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஏழை, எளிய மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவே தமிழ்நாட்டில் மினி கிளினிக் 2000 தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 தினங்களில் 2000 மினி கிளினிக்குகள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்படவுள்ளது. கர்ப்பிணிகள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று பிரசவம் பார்க்கும்போது அதிகத் தொகை செலவிடப்படுகிறது.

அவர்களின் செலவைக் குறைக்கும் வகையில் தற்போது மினி கிளினிக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சேலம் அரசு பொது மருத்துவமனையில் 500 படுக்கை வசதி கொண்ட மகளிர் மகப்பேறு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம் 50 படுக்கை வசதிகளுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. பெண்களுக்குச் சுகப்பிரசவம் ஏற்பட அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் முதல்கட்டமாக 34 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த 10 தினங்களுக்குள் 100 மினி கிளினிக்குகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் படிக்கும் 41 விழுக்காடு குழந்தைகள் கடந்தாண்டு நீட் தேர்வில் ஆறு பேருக்கு மட்டுமே இடம் கிடைத்தது.

அந்த மாணவர்களின் கனவை நனவாக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால் 313 மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

இந்திய வரலாற்றில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில்தான் கொண்டுவரப்பட்டுள்ளது. புதியதாக 1,650 மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன. இதில் அனைத்து வசதிகளும் நவீன முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் அடுத்த 10 நாள்களில் 2,000 மினி கிளினிக்குகள் திறப்பு

தமிழ்நாடு முழுவதும் 10 அரசு மருத்துவமனையில் தலா ரூ.20 கோடியில் புற்றுநோய் கண்டறியும் கருவி வழங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையைக் காட்டிலும் அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இரண்டு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதிமுக தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நிறைவுசெய்துள்ளது. இந்த ஆட்சி நீடிக்காது என நினைத்த அரசியல்வாதிகள், சுயநலவாதிகளின் கனவு, கானல் நீராகி உள்ளது. சிலர் குடும்பத்திற்காக கட்சி நடத்திவருகின்றனர். தமிழ்நாட்டில் எண்ணற்ற மாவட்டங்கள் இருப்பினும் சேலம் மாவட்டம்தான் முதலமைச்சர் மாவட்டம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

சேலத்தில் பரப்புரையைத் தொடங்கிய திமுக எம்.பி., எந்தத் திட்டமும் நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ளார். அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும். சேலம் மாநகராட்சியில் ரூ.965.87 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. சாலை அமைக்கும் பணி எனப் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.

மக்கள் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறோம். மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. மக்கள்தான் எஜமானார்கள், நீதிபதிகள். எனவே, அரசுக்கு களங்கம் கற்பித்துவருபவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும். மக்கள் எண்ணத்தை நிறைவேற்றும் அரசு தொடர்ந்து நீடிக்கும்" எனத் தெரிவித்தார்.

முதலமைச்சரைப் பாராட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், "தமிழ்நாட்டின் சூப்பர் பாஸ்ட் முதலமைச்சராக நம் முதலமைச்சர் செயல்பட்டுவருகிறார். அவர் மக்களுக்காக எந்நேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் 313 ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் சி.அ. ராமன், மாநிலங்களவை எம்.பி. சந்திரசேகரன், எம்எல்ஏக்கள் எஸ். செம்மலை, ஜி. வெங்கடாஜலம், ஏ.பி. சக்திவேல், கு. சித்ரா, முன்னாள் எம்.பி. வி. பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏக்கள் எம்.கே. செல்வராஜு, மு. நடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details