சேலம்: இரும்பு ஆலையை அடுத்த எஸ்.கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசு கடை நடத்தி வருபவர், கந்தசாமி. இவரது பட்டாசு கிடங்கில் கோயில் திருவிழாவிற்காக ஆர்டர் பெற்று நாட்டு வெடி தயாரிக்கும் பணி நடைபெற்று வந்து உள்ளது. இந்தப் பணியில் பட்டாசு கடை உரிமையாளர் கந்தசாமியின் மகன் சதீஷ்குமார் உள்ளிட்ட 8 பேர் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 1) மாலை 4 மணியளவில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் பட்டாசு வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும், வெடி விபத்து காரணமாக சிமெண்ட் கூரை கட்டடம் முழுவதும் தரைமட்டமானது. இந்த தீ விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிராஜ் அல்வனிஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே வெடி விபத்தில் பட்டாசு கிடங்கு உரிமையாளர் கந்தசாமியின் மகன் சதீஷ்குமார் (35), நடேசன் (50) மற்றும் அடையாளம் தெரியாத பெண் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர.
இதனைத் தொடர்ந்து வெடி விபத்தில் காயம் அடைந்த எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த ப.வசந்தா (45), வ.மோகனா (38), மணிமேகலை (36), வெ.மகேஸ்வரி (32), அ.பிரபாகரன் (31) மற்றும் மோ.பிருந்தா (28) ஆகிய 6 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.