சேலம்:மேட்டூர் அடுத்த பி.என்.பட்டி பேரூராட்சிக்குட்பட்ட தாளையூரை சேர்ந்தவர் தங்கவேல் (85). இவர் திமுகவில் இரண்டு முறை கிளை கழகச் செயலாளர், பி.என்.பட்டி பேரூர் துணைச் செயலாளர், பேரூர் அவைத் தலைவர், நங்க வள்ளி ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்தார்.
இந்த நிலையில் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாளையூரில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் தங்கவேல் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து வைத்துக் கொண்டு, இந்தி ஒழிக என்று கூச்சலிட்டவாரே உயிரிழந்தார்.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தங்கவேலின் இறுதிச் சடங்கிற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் முதற்கட்டமாக ஒரு லட்சம் ரொக்கம் வழங்கினார். தொடர்ந்து நேற்று (நவ 29) இரவு தாழையூரில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கவேலின் உருவப்படத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்த தங்கவேலுவின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு அஞ்சலி பின்னர் முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, கட்சி தலைமை சார்பில் 5 லட்சம் ரூபாயும் , மாவட்ட திமுக சார்பில் 5 லட்சம் ரூபாய் என மொத்தம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை உயிரிழந்த தங்கவேலுவின் மனைவி ஜானகியிடம் அமைச்சர் நேரு வழங்கினார்.
அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு, அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது தங்களது குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தங்கவேலுவின் குடும்பத்தினர் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ,ராஜேந்திரன் எம்எல்ஏ, சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வ கணபதி , மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சம்பத் குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு...திமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை