சேலம்: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ரூ.404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் இனி 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 1,253 அரசுப் பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் அறிவித்துள்ளார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை சேலம் மாவட்டத்தில் உள்ள ஊரகப்பகுதிகளில் விரிவாக்கம் செய்வது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று (ஜூலை 5) நடைபெற்றது. இதில், சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தலைமை வகித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், 'சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 1,253 தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 86,056 மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்திட ஏதுவாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதையும் படிங்க:நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் - தென்னக ரயில்வே தகவல்
சேலம் மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம், வாரந்தோறும் திங்கள்கிழமை ரவா உப்புமா- காய்கறி சாம்பார், செவ்வாய்க்கிழமை சேமியா காய்கறி கிச்சடி - காய்கறி சாம்பார், புதன்கிழமை வெண்பொங்கல் - காய்கறி சாம்பார், வியாழக்கிழமை உடைத்த அரிசி உப்புமா - காய்கறி சாம்பார் மற்றும் வெள்ளிக்கிழமை கோதுமை ரவா காய்கறி கிச்சடி - காய்கறி சாம்பார் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் விவரம், சமையலறைக் கூடங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், புதிய சமையலறை கூடங்கள் கட்டுதல், சுய உதவிக்குழுவில் பணியாற்றும் அனுபவமிக்க சமையல் பணியாளர்கள் தேர்வு போன்றவை விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது” என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ப.ரவிக்குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:சிக்னல்களில் பாடல்கள் கிடையாது.. இரவில் மூடப்பட்ட மேம்பாலங்கள் திறப்பு - சென்னை காவல் ஆணையர்