சேலம் மாவட்டத்தின் மரவனேரி பகுதியை அரசு கலைக் கல்லூரியின் இருப்பிடமாகவும், மாவட்டத் தலைமை நூலகத்தின் இருப்பிடமாகவும் மாவட்டத்திலுள்ள முக்கிய தனியார் பள்ளிகளின் இருப்பிடமாகவும் பரபரப்பான சாலைகளாகவும் பார்த்த மக்கள், கோர்ட்ரோடு காலனி பகுதியை அவ்வளவு எளிதில் கவனித்திருக்க வாய்ப்பில்லை.
மாவட்டம் முழுவதையும் தூய்மையானதாக வைக்க பாடுபட்டு வரும் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். சுமார் 1965ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை இப்பகுதியில் தாங்கள் சந்திக்கும் இன்னல்களை செவிகொடுத்து கேட்க இதுவரை எவரும் முன்வரவில்லை என ஈடிவி பாரத்திடம் கூறுகின்றனர் ஆதங்கத்துடன்.
"1965ல இருந்து இங்க தான் இருக்கோம். இப்போ வரைக்கும் நாங்க இருக்க எடத்துக்கு எங்களால பட்டா வாங்க முடியல. இதுவரைக்கும் மூணு கலெக்ட்டர் கிட்ட மனுவ குடுத்துட்டோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. இனிமே யார்கிட்ட போய் சொல்றதுன்னும் தெரியல" என்கின்றனர் நம்மிடம்.
இவர்களுக்கு என்ன பிரச்னை. ஏன் இவர்களுக்கு இவ்வளவு ஆதங்கம் என களத்தில் இறங்கி விசாரித்தபோது, இவர்கள் அடுக்கடுக்கான சுகாதார சீர்கேடுகளால் துன்புறுவது தெரியவந்துள்ளது.
50 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாத காலனி.. இப்பகுதியில் பொதுக் கழிப்பிடங்களாக இருந்தவை அனைத்தும் கட்டணக் கழிப்பிடங்களாக மாறியதே ஒழிய, அவற்றை சரியான முறையில் சுத்தம் செய்யவோ, கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மக்கள் பொதுவெளிகளை கழிப்பறைகளாக உபயோகிப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க அரசு அனைத்து வீடுகளுக்கும் இலவசக் கழிப்பறைகளை கட்டித் தருவதாக கூறியதுடன் சரி என்கிறார் இப்பகுதிவாசி சக்ரவர்த்தி.
இவர்களது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே இடுகாடு ஒன்று உள்ளது. பிணங்களை எரிக்கும்போது அவற்றிலிருந்து வெளிவரும் புகை சுவாசிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, எரிக்கப்பட்டபின் உண்டாகும் சாம்பல் காற்றில் பறந்து குடியிருப்பு பகுதிக்குள் வருகிறது. இது காற்றுடன் கலந்து சுவாசப் பிரச்னை, புற்றுநோய் உள்ளிட்ட எண்ணற்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்கிறார் அங்கு வசிக்கும் மூதாட்டி ராசாத்தி.
இப்பகுதி மக்கள் பட்டா பிரச்னையாலும், கழிப்பிட வசதியின்மையாலும், இடுகாட்டினால் உண்டாகும் சிக்கல்களினாலும் தொடர்ந்து துன்புறுகின்றனர். பல ஆண்டுகளாக இதே பகுதியில் வசித்தும் பட்டா கிடைக்காமல் ஒரு நாடோடி வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். அரசு சார்பில் பொதுக் கழிப்பிடம் கட்டிக் கொடுத்தும், அதை ஆளும் கட்சி அரசியல் கட்சிகள் கட்டணக் கழிப்பிடமாக மாற்றி மக்களை இம்சிக்கும் நிலை இருக்கிறது இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் ஊர் தலைவர் ரமேஷ்.
பட்டியலின மக்களும், தூய்மைப் பணியாளர்களும் அதிகம் வசிக்கும் இப்பகுதியில், தங்களுக்கு தூய்மையான சூழ்நிலையே இல்லை, இது குறித்து அரசு கருத்தில் கொண்டு விரைவில் ஆவன செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார் இப்பகுதி வாசியான இளங்கோ.
இப்படி, மாறிவரும் கட்சிகளிடமும், அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களிடமும் கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருக்கும் மக்கள், என்று அவற்றிற்கான தீர்வினை பெறுவார்கள் என்பதை யார் அறிவார்?