சேலம்:மேட்டூர் அனல் மின் நிலையத்தில் எரிக்கப்படும் நிலக்கரியில் இருந்து வெளியேற்றப்படும் உலர் சாம்பலை வெளியேற்ற தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முறையான டெண்டர் விடப்பட்டு உலர் சாம்பல் வெளியே எடுத்துச் செல்லப்படவில்லை என்று புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முருகன் வெங்கடாசலம், மேட்டூர் அனல் மின் நிலையம் தலைமை பொறியாளர் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுக்குப் புகார் மனுக்கள் அனுப்பினார்.
இதனையடுத்து துறை ரீதியான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு உலர் சாம்பல் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் உலர் சாம்பல் தற்போதும் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படுவதாகவும் அதற்கான அனுமதி தலைமைப் பொறியாளரால் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு மின் வாரிய தலைமைப் பொறியாளர் விளக்கம்:இதனையடுத்து, இது குறித்து தலைமைப் பொறியாளர் அங்கு சித்ராவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, ஒப்பந்தம் வழங்கப்படுவதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. ' ஸ்மூத்' ஆக பணிகள் நடைபெறுகிறது. புகார்கள் எழ வேண்டிய தேவை இல்லை எனவும், பினாமி நிறுவனங்கள் எதுவும் இல்லை ' என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு மின்வாரிய அலுவலர் - தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கு.கா.பாவலன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,' திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஓராண்டாகத்தான் உலர் சாம்பல் ஒப்பந்தம் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனால் மின்வாரியத்திற்கு வருவாய் கிடைக்கிறது.
முருகன் வெங்கடாச்சலம் பொய்யான குற்றத்தை பரப்பி வருகிறார்:இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் முருகன் வெங்கடாசலம், தலைமை பொறியாளரைத் தினந்தோறும் சந்தித்து அவர் சொல்லும் ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே உலர் சாம்பலை எடுத்துச் செல்வதற்கு ஆணை வழங்க வேண்டும் என்று மிரட்டி அச்சுறுத்தி வருகிறார். அவ்வாறு மிரட்டி 15 கம்பெனிகளுக்கு 5000 டன் வீதம் 75 ஆயிரம் டன் உலர் சாம்பல் எடுத்துச் செல்வதற்கு ஆணை பெற்றுள்ளார்.
நிலைமை இவ்வாறு இருக்கத் தலைமை பொறியாளர் திருமதி அங்கு சித்ரா அவர்கள் தனது பினாமி கம்பெனிகளுக்கு உலர் சாம்பல் ஒப்பந்தம் வழங்கி வருகிறார் என்று அவர் மீது அபாண்டமாக பொய்யான குற்றத்தை முருகன் வெங்கடாச்சலம் சுமத்தி வருகிறார். அவர் எத்தனை முறை அனல் மின் நிலையத்திற்குள் நுழைந்தார் என்பதை சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தாலே தெரிய வரும் என்றார்.