தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் அரசு மருத்துவமனையிலும் குழந்தை விற்பனை; சிபிசிஐடி விசாரணை! - சேலம் மாவட்டம்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய ஜெயா என்பவர் குழந்தையை விற்று, திரும்ப வாங்கிக் கொண்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது. இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை விற்பனை

By

Published : May 13, 2019, 2:59 PM IST

சேலம் மாவட்டம், மேச்சேரியை சேர்ந்தவர் ராணி. இவரின் முதல் கணவர் உயிரிழந்த நிலையில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் பாலு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ராணி மீண்டும் கருவுற்றார். 2018ஆம் ஆண்டு மே மாதம் ராணிக்கு, சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. நான்கு பெண் குழந்தையை வளர்ப்பது கடினம் என்பதால், பிறந்த பெண்குழந்தையை விற்றுவிட ராணி முடிவு செய்தார். இதற்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் துப்புரவு பணியாளராகப் பணியாற்றி வரும் ஜெயாவை அணுகினார்.

பின்னர் ஜெயாவின் உதவியுடன் ராமேஸ்வரத்தை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கு பல லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்றுவிட்டார். இந்நிலையில் ராணிக்கு, தனது பெண் குழந்தையை பார்க்க வேண்டும் என்று ஆசை தோன்றியது. இதனால், சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்று ஜெயாவிடம், "தான் வாங்கிய பணத்தை திருப்பி தருகிறேன். என்னுடைய குழந்தையை திரும்ப தந்துவிடுங்கள்" என்று கெஞ்சியுள்ளார்.

குழந்தையை திருப்பி தர ஜெயா மறுத்ததால், ஆத்திரமடைந்த ராணி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஜெயாவின் மீது புகார் அளித்தார். இந்த தகவலை அறிந்த டாக்டர், அந்த குழந்தையை கொண்டுவந்து ஜெயாவிடமே ஒப்படைத்துவிட்டார். இதனால் காவல்துறை வழக்கு ஏதும் பதிவு செய்ய வில்லை. இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் ஜெயா பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சேலம் அரசு மருத்துவமனையில் சிபிசிஐடி அதிரடி விசாரணை!

தற்போது நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்றது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய ஜெயா, மேச்சேரியை சேர்ந்த ராணியிடம் குழந்தையை வாங்கி விற்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details