சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி ஏரி 52 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தது. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரிக்குத் தண்ணீர் வரவில்லை எனும் காரணத்தினாலும், பருவ மழையும் சரியாகப் பெய்யாததாலும், ஏரி முழுமையாக வறண்டு காட்சியளித்துள்ளது.
இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் அமைச்சராக இருந்த தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர், கடந்த 2016ஆம் ஆண்டு 75 லட்சம் ரூபாய் மதிப்பில் மேட்டூர் அணை கிழக்கு கடற்கரை கால்வாயிலிருந்து, வெளியேறும் உபரி நீரைக் குழாய் மூலம் கொண்டு வந்து, அந்த தண்ணீரை விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தும் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
எனவே, மூன்று ஆண்டுகளாகக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த வெள்ளரிவெள்ளி ஏரி நீர்மட்டம் நேற்று அதன் முழுக் கொள்ளளவை எட்டி கரையில் தண்ணீர் வழிந்து ஓடியது . இதைப் பார்த்த அப்பகுதி விவசாயிகள், கண்ணீர் மல்க இறை வழிபாடு நடத்திக் கிடா வெட்டி மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள் .