சேலம் சின்ன கடைவீதியில் இயங்கி வந்த வ.உ.சி. பூ மார்க்கெட் சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்ட புனரமைப்புக்காக, நகர பேருந்து நிலையம் அருகே இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த வளாகத்தில் மொத்தம் 174 கடைகள் இயங்கிவருகின்றன. சேலம் மாநகராட்சி சார்பில் 176 கடைகளும் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டன. அதனடிப்படையில் மாநகராட்சி சார்பில் குத்தகை ஒப்பந்த அடிப்படையில் ஒரு கடைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.20 வாடகையாக நிர்ணயிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் வாடகை வசூலிப்பதில் மாநகராட்சி அலுவலர்கள் ஒத்துழைப்போடு குத்தகைதாரர்கள் விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணமாக ரூபாய் 100 முதல் 300 வரை வசூலிப்பதாக வியாபாரிகள் குற்றம்சாட்டி, வாடகை தொகையை வியாபாரிகள் கொடுக்கமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் வியாபாரிகள் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பூ மார்க்கெட் தனியார் குத்தகையை ரத்து செய்ய உத்தரவிட்டதுடன் மாநகராட்சி நிர்வாகமே வசூல் செய்ய வேண்டும் என ஆணை பிறப்பித்தது.
அதனடிப்படையில் கடந்த ஜனவரி 25ஆம் தேதியில் இருந்து மாநகராட்சி நிர்வாகம் கடை ஒன்றுக்கு 60 ரூபாய் வசூல் செய்து வருகிறது. ஆனால் 20 ரூபாய்க்கு 60 ரூபாய் வசூல் செய்து வருகின்றனர் என வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்ற ஆணைய வழக்கறிஞர் சுரேஷ் பூ மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளுக்கும் சென்று வியாபாரிகளிடம் கடைகளுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டார்.