காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று முன்தினம் கபினி அணையிலிருந்து திறக்கப்பட்ட கூடுதல் நீர் இன்று காலை 5 மணியளவில் மேட்டூர் அணையை வந்தடைந்தது. நேற்று காலை நிலவரப்படி ஐந்தாயிரத்து 236 கனஅடியாக இருந்த மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை 5 மணிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
சீறிவருகிறாள் காவிரி...! - கரையோர மக்களே உஷார் - ஒகேனக்கல்
சேலம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் முதல் மேட்டூர் அணை வரையிலான கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூன்று மடங்கு அதிகரித்துள்ள நீர்வரத்து அடுத்த சில மணி நேரங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதில் கபினி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட ஒரு லட்சம் கனஅடி நீர் விரைவில் வந்தடையும் என்பதால் அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் பெரிய அளவில் உயர வாய்ப்பிருக்கிறது. இதனால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஒகேனக்கல் முதல் மேட்டூர் அணை நீர்த்தேக்கம் வரையிலான கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத் துறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.