தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈபிஎஸ் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுமா? சொத்து விவரத்தில் தவறான தகவல் வழக்கில் அறிக்கை தாக்கல்! - Salem Court

கடந்த 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் அளித்ததாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

eps
இபிஎஸ்

By

Published : May 27, 2023, 11:43 AM IST

Updated : May 27, 2023, 11:49 AM IST

சேலம்: தேனி பழனிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் பி.மிலானி. இவர் தேனி மாவட்டத்தில் திமுக முன்னாள் மாணவர் அணி அமைப்பாளராக இருந்தவர். தற்போது தேனியில் அரசியல் பிரமுகராக செயல்பட்டு வருகிறார்.

இவர் கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் போது வேட்பு மனுவில் தவறான தகவல் அளித்ததாக, சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-க்கு ஆன்லைன் மூலம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் மனு அளித்தார்.

அதில், "அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவுகள் 33 மற்றும் 33 ஏ-ன்படி தனது வேட்பு மனுவின் போது பிரமாண பத்திரத்தில் ஆண்டு வருமானம், அசையா சொத்துகள், கடன் விவரங்கள் குறித்து தவறான தகவலை தெரிவித்துள்ளாக" தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த ஆன்லைன் புகார் மனு குறித்து விசாரித்த சேலம் குற்றவியல் நடுவர் எண் -1 நீதிமன்றம், மனு குறித்து சேலம் மத்தியக்குற்றப் பிரிவு வழக்கை விசாரித்து, போதிய முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும், அதுகுறித்த அறிக்கையை மே 26 ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்றும், விசாரணையின் போது மனுதாரருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி உத்தரவிடப்பட்டிருந்தது.

தற்போது வேட்பு மனுவில் தவறான தகவலை அளித்ததாக, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ(1), 125 ஏ(2), 125 ஏ(3) ஆகிய பிரிவுகளின் கீழ் சேலம் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதைத் தொடர்ந்து சேலம் மத்திய பிரிவு குற்றப்பிரிவு போலீசார், எடப்பாடி பழனிச்சாமியின் வங்கிக் கணக்கு, அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள், மனைவி, உறவினர்களின் சொத்து மதிப்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கடந்த ஒருமாத காலமாக தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் வழக்கு பதிவு தொடர்பான விசாரணை அறிக்கையை சேலம் மத்திய குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராணி, சேலம் குற்றவியல் நடுவர் எண் -1 நீதிமன்றத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசர் நேற்று தாக்கல் செய்துள்ளனர். மேலும், தவறான தகவல் அளித்தது தேர்தல் ஆணையத்தில் நிரூபிக்கப்பட்டால் எடப்பாடியின் பதிவி பறிக்கப்பட வாய்ப்புள்ளது என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஈபிஎஸ் மீது தேனி அரசியல் பிரமுகர் புகார் மனு - மத்திய குற்றப்பிரிவு விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

Last Updated : May 27, 2023, 11:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details