சேலம்:இந்தியக் குடியரசு கட்சியின் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் முன்னாள் சபாநாயகரும் அக்கட்சியின் தலைவரும் தமிழரசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செ.கு. தமிழரசன் கூறுகையில், நாங்குநேரி சம்பவம் 'சாதிய ஆதிக்க தாக்குதல் மனிதப் பண்பிற்கு எதிராக விடப்பட்ட சவால்.23ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பெரியார் மண் என நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிற வேளையில்,பிஞ்சு குழந்தைகள் இடையே இந்த சாதிய ஆதிக்க மனோபாவத்தால் இந்த கொடூரம் நிகழ்ந்திருக்கிறது என்றால் இதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது.
இது அரசாங்க நிர்வாகத்திற்கும் விடப்பட்ட சவால். இதற்கு சமூகத்தை நான் குறை சொல்ல மாட்டேன்.ஆனால் இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் ஆட்சியாளர்கள் தான். அரசியல் கட்சிகள் தான் இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்.இது போன்ற பிரச்சனைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் .இதற்கு ஒரு நீதியைப் பெற்றுத் தர வேண்டும்.இது போன்ற சாதிய வன்கொடுமைகள் தொடராமல் இருப்பதற்குத் தொடர்புடையவர்களுக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டும்.
ஆனால் ஆட்சியாளர்கள் இதை ஒரு சடங்காகாகவும்,சம்பிரதாயமாகவும் பார்த்து தன்னுடைய கருத்துக்களை முன் வைத்துச் செல்கிறார்கள். வேங்கை வயல் சம்பவம் நடந்து இன்று ஐந்து மாதங்கள் முடிந்து ஆறு மாதங்கள் ஆகிறது.இதுவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குச் சென்று பார்வையிடவில்லை அதற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.