தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலத்திலிருந்து ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 16 பேர் படுகாயம்! - போலீஸ் வலைவீச்சு

சேலம்: கொண்டலாம்பட்டி அருகே பட்டர்பிளை பாலத்திலிருந்து ஆம்னி பேருந்து ஒன்று இன்று அதிகாலை கவிழ்ந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

salem

By

Published : Feb 13, 2019, 12:16 PM IST

பெங்களூரிலிருந்து பொள்ளாச்சிக்கு எஸ்.ஆர்.எஸ். என்ற ஆம்னி பேருந்து நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் (பிப்.12) புறப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை (பிப்.13) சேலம் கொண்டலாம்பட்டி பை-பாஸ் அருகில் உள்ள பட்டர்பிளை பாலம் பகுதியில் பேருந்து அதிக வேகத்தில் வந்ததாக தெரிகிறது.

இதனால் கண்ணிமைக்கும் நொடியில் 30 அடி உயர பாலத்திலிருந்து பேருந்தானது தலைகீழாக கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த தனசேகர் (35) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், 16-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர், துணை ஆணையர்கள் தங்கதுரை, சியாமளா தேவி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த விபத்தால் பட்டர்பிளை பாலம் பகுதியில் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. மேலும், 5-க்கும் மேற்பட்ட ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு பேருந்தை தூக்கி நிறுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் சரவணன், அசில் ராஜ், துரைசாமி சிவசங்கர், வாசுதேவன் பைசல், சாந்தி, கணேசன், ஜெயலட்சுமி அபிஷேக், முகமது உள்பட 16 பேர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள்.

விபத்தை அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து மீட்புப் பணியை முடுக்கிவிட்டார். மேலும், அவர் விபத்து குறித்து மாநகர காவல் துறையினரிடம் விசாரணை செய்தார்.

அன்னதானப்பட்டி காவல் துறையினர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் பேருந்தின் மேல்பகுதி முழுவதும் துணி மூட்டைகள், மளிகை பொருட்கள் அடங்கிய மூட்டைகள் அதிகஅளவில் அடுக்கி எடுத்து வந்ததால், பாரம் தாங்காமல் பேருந்து கவிழ முக்கியக் காரணமாக இருக்கலாம் என தெரியவந்தது.

ABOUT THE AUTHOR

...view details