கடந்த 20ஆம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த நரிப்பள்ளம் என்ற பகுதியில் சேலம் வழியாக, கன்னியாகுமரியிலிருந்து பெங்களூருவுக்குச் சென்ற சுற்றுலா வேன், பெங்களூருவிலிருந்து சேலம் நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நேபாளத்தைச் சேர்ந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த 24 பேர் சேலம் அரசு தலைமை பொதுமருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். தீவிர சிகிச்சைப் பெற்றுவருபவர்களில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார். தற்போது, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நேபாள நாட்டினரின் ஏழு பேரின் உடல்களையும் பெறுவதற்காக அந்நாட்டு துணைத் தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் பாபு ராம் சிக்தயால், தமிழ்நாட்டில் வாழும் குடிபெயர்ந்த நேபாளியர் சங்கத்தின் மத்திய ஆலோசகர் டிக்கா பெளடேல் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களிடம் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் முழுத் தகவல்கள் அளிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
பின்னர் இந்தியத் தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் பாபு ராம் சிக்தயால் கூறுகையில், "தமிழ்நாடு அரசின் உதவியை எப்போதும் மறக்க முடியாது. சாதி, மதம், மொழி என வேறுபாடு பார்க்காமல் தமிழர்கள் அனைவரும் இந்த விபத்தில் சிக்கியவர்களின் நலனுக்காக உதவினர். இந்த விபத்து எதிர்பாராத ஒன்று. மிகுந்த துயரமான சம்பவத்திலும் தமிழ்நாடு அரசின் உதவி எங்களுக்கு மகிழ்வைத் தருகிறது"என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் நேபாள மக்கள் இதனையடுத்து டிக்கா பெளடேல் கூறுகையில், "தமிழர்கள் எப்போதும் பால் போன்று வெண்மை உள்ளம் கொண்டவர்கள். வந்தாரை வாழவைக்கும் மாநிலம் தமிழ்நாடு. தமிழர்களுக்கு நாங்கள் நேபாள நாட்டின் சார்பில் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இறந்தவர்களின் உடல்கள் சேலத்திலிருந்து பெங்களூரு வரை செஞ்சிலுவைச் சங்கம் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்படும்.
அங்கிருந்து முத்தூட் பைனான்ஸ் உதவியுடன் பெங்களூருவிலிருந்து விமானம் மூலம் இறந்தவர்களின் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் நேபாள நாட்டில் நல்லடக்கம் செய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மாணவர்கள் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் - திமுக எம்.பி.