சேலம்: பாஜகவின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிசம்பர் 15) சேலத்தில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி கூறுகையில், " மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க பாஜக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டங்கள் வாயிலாக நாடு முழுவதும் பல புதிய சந்தைகள் உருவாகும். இந்த சட்டங்களின் ஒட்டுமொத்த நன்மை மற்றும் பலன்கள் விவசாயிகளை சென்றடைய மத்திய அரசு துணை நிற்கும். ஆனால் எதிர்க்கட்சிகள் இடைத்தரகர்களுக்கு மட்டுமே துணை நின்று போராட்டங்களை நடத்தி வருகின்றன. மத்திய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பயிருக்கு மட்டுமே ஒப்பந்தம் போடப்படும் என்பதையும், நிலத்திற்கு ஒப்பந்தம் போடப்படாது என்பதையும் இந்த புதிய சட்டம் உறுதி செய்துள்ளது. மத்திய அரசு, வேளாண்மை சட்டங்கள் கொண்டு வந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.