சேலம்: சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநில மாநாடு பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பந்தல் அமைக்கும் பணியினை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று (ஜன.24) தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிப்ரவரி மாதம் முழுவதும் பல்வேறு மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞரணி, மகளிர் அணி, ஓபிசி அணிகள் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் சார்பில் மாநாடுகள் நடத்தப்பட்டு மார்ச் மாதம் மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது.
இந்த மாநாடுகளில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநில மாநாடு தமிழ்நாட்டு அரசியலில் தாக்கத்தை உருவாக்கும். தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் அதிக அளவில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.
மத்தியில் நல்லாட்சி நடத்தும் பிரதமர் மோடியின் நல்லாட்சி, தமிழ்நாட்டிலும் வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்கள் அதிக அளவில் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். பாஜகவின் வேல் யாத்திரை வெற்றியடைந்துள்ளது. யாரெல்லாம் யாத்திரையை விமர்சித்தார்களோ, அரசியல் யாத்திரை என்று கூறினார்களோ, அவர்களே கையில் வேலை தூக்கும் கட்டாயத்தினை, வேல் யாத்திரை உண்டாக்கி விட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின் கையில் வேலை தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்து மத நம்பிக்கையை தொடர்ந்து அவமதித்து விட்டு, தற்போது என்ன வேடம் போட்டாலும் அதனை மக்கள் நம்பமாட்டார்கள்.