தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"காவல்துறையை வம்புக்கு இழுக்கிறேன்" - சேலம் 'என் மண், என் மக்கள்' யாத்திரையில் அண்ணாமலை ஆவேசம்..!

BJP TN President Annamalai Press Meet: சேலம் மாவட்டத்தில் என் மண், என் மக்கள் யாத்திரையில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக ஆட்சிப் பொறுப்பை திமுக ஏற்றதிலிருந்து பல லட்சம் ரூபாய்க் கடன் சுமை அதிகரித்து உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் 'என் மண், என் மக்கள்' யாத்திரையில் அண்ணாமலை ஆவேசம்
சேலம் 'என் மண், என் மக்கள்' யாத்திரையில் அண்ணாமலை ஆவேசம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 10:19 PM IST

Updated : Jan 5, 2024, 10:57 PM IST

சேலம் 'என் மண், என் மக்கள்' யாத்திரையில் அண்ணாமலை ஆவேசம்

சேலம்: 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் சேலத்தில் இன்று(ஜன.5) நடைப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தோராயமாக 2 லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய்க் கடன் வாங்கி உள்ளது. தமிழ்நாட்டின் கடன் 8 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

திமுகவைப் பொறுத்தவரையில் நிதிநிலையை உருவாக்குகின்ற சக்தி இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதாரத்தை ஈட்டுவதற்கான எந்த வழி வகையையும் எடுக்காமல், நிதிநிலை சரியில்லை என்று பஞ்சப்பாட்டு பாடுகிறார்கள். ஆட்சிப்பொறுப்பு ஏற்ற முதல் நாளிலிருந்து இன்று வரை இதை மட்டும் தான் காரணமாகச் சொல்லி வருகிறார்கள்.

அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு அறிவிப்பதற்கு முன்னதாக, திமுக அரசு ஒரு நாடகம் நடத்தி விட்டு அதன் பின்னர் ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள் என்று நான் முன்கூட்டியே சொல்லி இருந்தேன். எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது 5 அயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்கள். ஆனால் தற்போது, சத்தமே இல்லாமல் ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு, நிதிநிலை சரியில்லை என்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் நிதிநிலை சரியில்லை என்றால் அதற்கு திமுக தான் காரணம்.

கடந்த 31 மாதங்களாக ஆட்சியில் உள்ளனர். லஞ்சம் இல்லாமல் தமிழ்நாட்டிற்குள் நிதி நிறுவனம் வரமுடியாது. கையூட்டு கொடுக்காமல் தமிழ்நாட்டில் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க முடியாது. தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது. திமுகவைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டை அதலபாதாளத்தில் தள்ளுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

10 லட்சம் கோடி கடனானது, இன்னும் இரண்டு ஆண்டுகளில் இதே நிலையில் சென்றால் உச்சத்தைத் தொட்டுவிடுவோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்குக் கடன் கிடையாது. இந்த நிலை நீடித்தால் 10 லட்சம் கோடி கடனுடன் தமிழ்நாடு எந்த இடத்திற்குப் போய்ச் சேரும் என்பதை மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகத்தின் ஆவணம் வெளியிட்டது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், "நிறைய ஆவணங்கள் உள்ளது. அதைக் கொடுத்தால் காவல்துறை அதிகாரிகளைத் தான் கைது செய்து உள்ளே வைக்க வேண்டும். தவறு செய்யும் போது வெளியே வந்து பேசுவது தான் என்னுடைய கடமை. என்னுடைய வேலை தமிழ்நாட்டில் அரசியலில் வந்த பிறகு எங்கெல்லாம் தவறு செய்கிறார்களோ? அது குறித்த ஆவணங்களை வெளியிடுவேன்.

அதேபோன்று தான் இந்த ஆவணத்தையும் வெளியிட்டேன். இந்த வீடியோவை பார்த்தால் சித்தரித்த வழக்கு என்பது தெரியும். இன்றைக்குக் கோபம் யார் மீது திரும்ப வேண்டும் என்றால் ஜெகநாதன் போன்றோர் மீது குற்றத்தை ஜோடித்தவர்கள் மீது தான். அதற்கான ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலையைத் தொடக்கூடாது. விசாரணைக்கு அழைத்தால் பல ஆவணங்களை வெளியிடுகிறேன். காவல்துறையை வம்புக்கு இழுக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் கிடையாது.

ஜெகநாதனுக்கு ஏற்பட்ட தனிமனிதருக்கு ஏற்பட்ட விஷயம் என்பது தமிழன் ஒவ்வொருவருக்குமான தலைகுனிவு. துணை வேந்தர் மீது கைவைக்கும் பட்சத்தில் தனிமனிதருக்கு என்ன மரியாதை உள்ளது" என்று தெரிவித்தார். பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக ஓபிஎஸ் கூறியது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, "பாராளுமன்ற தேர்வுக் குழு கூட்டணி இது குறித்து முடிவு செய்வார்கள். பிரதமர் மோடி தலைமை ஏற்று யார் வந்தாலும் மகிழ்ச்சி தான்" என்று கூறினார்.

இதையும் படிங்க:பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

Last Updated : Jan 5, 2024, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details