பாஜகவின் மூத்தத் தலைவர் கே.என். லட்சுமணன் (92), சேலம் மாநகரில், செவ்வாய்பேட்டையில், 1930 அக்டோபர் 20ஆம் தேதி பிறந்தார்.
இவர் நா.பா. வாசுதேவன் என்பவரது மூலம் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.) 1944ஆம் ஆண்டு தன்னை இணைத்துக் கொண்டார்.
சேலத்தில் 1957ஆம் ஆண்டில் ஜனசங்கம் தொடங்க முக்கியக் காரணமாக இருந்துள்ளார். நா.பா. வாசுதேவன், ஜனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பாஜக மாநிலத் தலைவர்களாக இருந்த காலகட்டத்தில் கே.என். லட்சுமணன் மாநில பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1971ஆம் ஆண்டு சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களில் கே.என். லட்சுமணன் முக்கியமானவர் என்பது நினைவுகூரத்தக்கதாகும்.
அண்மையில் இவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வீட்டிலேயே மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்துவந்த நிலையில், இன்று இரவு 9.05 மணிக்கு காலமானார். இவருக்கு ரங்கநாயகி என்ற மனைவியும், சந்திரசேகரன் என்ற மகனும், புவனேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
இதையும் படிங்க:ஜூன் 19 இல் 18 மாநிலங்களவை இடங்களுக்குத் தேர்தல்...!